டில்லி
ஊரடங்கால் நாட்டின் பல பகுதிகளில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் அந்த மாநிலங்களுக்குள் இடம் பெயர அனுமதி அளிக்கப்பட உள்ளனர்.
கொரோனா பாதிப்பு குறையாததால் தேசிய ஊரடங்கை மே மாதம் 3 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதனால் வெளி மாநில தொழிலாளர்கள் பலர் பணி புரிய வந்த இடத்தில் சிக்கி உள்ளனர். அது மட்டும் இன்றி மாநிலத்துக்குள்ளேயே இருக்கும் தொழிலாளர்களும் வெளி மாவட்டங்களில் பணி புரிய வந்து ஊரடங்கால் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இவர்களுக்காக முகாம்கள் அமைத்து உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாளை முதல் ஊரடங்கில் ஒரு சில சலுகைகள் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அவ்வகையில் மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணி காரணமாகப் பலர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். தற்போது இவர்கள் மாநிலங்களுக்குள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஒரு சில கண்டிஷன்களுடன் அனுமதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அந்தந்த மாநிலத்துக்குள் மட்டுமே செல்ல முடியுமே தவிர மற்ற மாநிலங்களுக்குச் செல்ல முடியாது. இவர்களுக்கு முழு பரிசோதனை செய்து கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி ஆன பிறகே இவர்கள் முகாமை விட்டு வெளியேற முடியும். அத்துடன் இவர்கள் தாங்கள் தங்கி உள்ள முகாம்களில் தாங்கள் செல்லும் இடம் மற்றும் எதற்காகச் செல்கிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
இதைப் போல் மாநிலங்களுக்குள்ளேயே மீண்டும் பணிக்குத் திரும்ப விரும்புவோரும் முழு பரிசோதனைக்கு பிறகே செல்ல அனுமதிக்கப்படுவார்.கள். இவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்ற வேண்டும் இவர்கள் செல்லும் பேருந்தை ஏற்பாடு செய்யும் அதிகாரிகள் பேருந்து முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். இவர்களுக்கு வழியில் உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை அதிகாரிகள் அளிக்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.