திருச்சி: திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதலே அங்கு அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட வகையில், சுமார் 38 ஏக்கா் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் ரூ.408.36 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மே 9-ஆம் தேதி திறந்துவைத்தாலும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இறுதிக் கட்டப் பணிகளின் நிலுவை, பாரமரிப்பு மற்றும் இயக்குதல் பணியை தனியாருக்கு வழங்கும் ஏற்பாடுகள் காரணமாக தாமதமான நிலையில், பிறகு, ஜூலை 16 முதல் பஞ்சப்பூா் பேருந்து முனையம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தபேருந்து நிலையத்தின் தரைத்தளத்தில் 345 வெளியூா் பேருந்துகள், முதல் தளத்தில் 56 உள்ளூா் நகரப் பேருந்துகள் என மொத்தம் 401 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஜன் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் பெரும்பாலான பேருந்துகள் இங்கு மாற்றப்பட்டன. இதனால், அதை நம்பி தொழில் செய்து வரும் வணிகர்கள், ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ ஸ்டேண்டு அமைத்துள்ளனர். இதில், தொழிற்சங்கங்களுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பின்புறமும், மற்ற தொழிற்சங்கங்களுக்கு முன்புறமும் தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட்டது. எனினும், ஆட்டோ தொழிலாளர்கள் தங்களுக்கு முறையான இடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த மோத ல் நேற்று நள்ளிரவு தீவிரமடைந்தது. ஆட்டோ ஸ்டாண்ட் தொடர்பான மோதலில், 2 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஓட்டுநர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் அரிவாளால் தாக்கிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, வெட்டு காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதாவது ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், சேக், ராம்குமார் ஆகியோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பார்க்கச் சென்ற அப்துல் ரகுமான் என்ற ஆட்டோ ஓட்டுநரும் எடமலைப்பட்டிப்புதூர் அருகே அரிவாளால் வெட்டப்பட்டார்.
இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஒரு தரப்பினர் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் காமினி, துணை ஆணையர் ஈஸ்வரன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, காவல் ஆணையர் நேரடியாக களத்தில் இறங்கி, தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
முறையான திட்டமிடல் இல்லாமல் அவசர கதியில் திறக்கப்பட்ட பஞ்சபூர் பேருந்து நிலையம், திறக்கப்பட்டதில் இருந்து இதுபோல தினசரி பல சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.