திலிபன்.. தமிழகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், “பிரபாகரன்” என்கிற பெயருக்கு அடுத்தபடியாக தங்கள் குழந்தைகளுக்கு அதிகம் சூட்டிய பெயர்.
பார்த்திபன் இராசையா என்கிற திலிபன், இலங்கை வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் அருகே ஊரெழு என்ற ஊரில் 1963ம் வருடம் நவம்பர் 27ம் தேதி பிறந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால முக்கிய உறுப்பினர்.
1987ம் வருடம் இலங்கை வடக்கு கிழக்கு பகுதியில் இந்திய ராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் இருந்த போது ஐந்து முக்கிய கோரிக்கைகளை விடுதலைப்புலிகள் முன்வைத்தனர்.
1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கு கிழக்கு பகுதிகளில் திட்டமிட்டு புது குடியேற்றங்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்தவேண்டும்.
2. சிறைக் கூடங்களிலும் இராணுவ மற்றும் காவல்துறை தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் திரும்பப்பெற வேண்டும்.
5. தமிழர் பகுதிகளில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்…
என்பதுதான் அந்த கோரிக்ககள்.
இதை வலியுறுத்தி 1987ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள்.. யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலிபன் உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.
இந்த கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்கவில்லை. ஆனாலும் தனது கோரிக்குக்காக… ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார் திலிபன்.
இறுதியில் கோரிக்கைகள் ஏற்கப்படாத சூழலில் செப்டம்பர் 26ம் தேதி மரணமடைந்தார்.
அவரது இறுதி ஊர்வலத்தில் ஈழமக்கள் ஆகப்பெரும்பாலோர் கலந்துகொண்டார்கள். அந்த காலகட்டத்தில் பிறக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு திலிபன் என்று பெயர்கள் சூட்டுவது வழக்கமானது.
திலிபன் மறைந்த அந்த இடத்தில் பின்னாட்களில் நினைவிடம் எழுப்பப்பட்டது. ஆனால் சமீபகாலமாக அந்த நினைவிடம் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. அந்த நினைவிடத்தை யாரும் பராமரிப்பது இல்லை. மக்கல் குப்பை போடும் இடமாகவே ஆகிவிட்டது. இன்று திலிபன் நினைவு தினத்தை முன்னிட்டு சரி செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொடுமைதான்!