நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு, ‘ஹீரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களை தயாரித்த 24 ஏ.எம் ஸ்டுடியோஸின் ஆர்.டி.ராஜா, டிஆர்எஸ் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து 10 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதற்கான அசல், வட்டியை அவர் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. ஹீரோ படத்தைத் தயாரிப்பதாக இருந்த ஆர்.டி.ராஜா அதை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்குக் கைமாற்றியுள்ளார்.
இதையடுத்து டிஆர்எஸ் பிலிம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆர்.டி.ராஜா சிவகார்த்தியின் அடித்த படத்தை ரகசியமாக கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டதாகவும், தங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தனர். ஹீரோ உள்பட 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் ரிலீசுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மைய நீதிபதி எம்.கணேசன், ரூ.10 கோடி கடனை திருப்பி தராததால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
ஹீரோ திரைப்படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ரசிகர்களும், படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
[youtube-feed feed=1]