வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு ஓராண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பலாம் என்று வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை (எப்.சி.ஆர்.ஏ.,) மத்திய அரசு திருத்தியுள்ளது.

இதுவரை ஓராண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் என்று இருந்த உச்ச வரம்பை 10 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக பணம் பெரும் இந்தியர்கள் 30 நாட்களுக்குள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற காலக்கெடுவையும் 90 நாட்களாக மாற்றியுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்றிரவு வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து பணம்பெறும் தனிநபர், நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் தங்களது வங்கிக்கணக்கு குறித்த விவரங்களை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இனி 45 நாட்களாக தள்ளர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், வெளிநாட்டில் இருந்து நன்கொடை அனுப்பியவர்களின் பெயர், பெறப்பட்ட தொகை, அனுப்பிய தேதி உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொரு காலாண்டும் இணையதளத்தில் வெளியிடும் சரத்தை நீக்கி இருக்கிறது.

அதற்கு பதிலாக எப்.சி.ஆர்.ஏ. விதிகளின் கீழ் வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெற்ற அமைப்புகள் தங்கள் ஆண்டு நிதிநிலை மற்றும் வருமான கணக்கு தாக்கல் செய்யும் போது விவரங்களை அளித்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளது.

நன்கொடையாக வரும் பணத்தை விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சாதி மற்றும் மதம் சார்ந்த என்.ஜி.ஓ.க்கள் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு மடைமாற்றி விடுவதாக கூறி அவற்றுக்கான எப்.சி.ஆர்.ஏ. விதிகளை 2020 நவம்பர் மாதம் கடுமையாக்கியது.

புதிய எப்.சி.ஆர்.ஏ. விதிகளின்படி பொது சேவையில் உள்ளவர்கள் வெளிநாட்டு நன்கொடை பெற முடியாது என்றும் அரசு சாரா அமைப்புகளின் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்கள் ஆதார் விவரங்களை கட்டாயம் வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெரும் என்.ஜி.ஓ.க்கள் தங்களுக்கு வரும் தொகையில் 20 சதவீதம் மட்டுமே நிர்வாக செலவினங்களுக்காக பயன்படுத்தமுடியும் என்று தெரிவித்துள்ளது, இதுவரை 50 சதவீத தொகை நிர்வாக செலவினங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற எப்.சி.ஆர்.ஏ. விதியை மாற்றியுள்ளது மத்திய அரசு.