சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பணியில் பொதுச்செயலாளர் சசிகலா, அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தொண்டர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை பட்டியலிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் சசிகலா தெரிவித்திருப்பதாவது:
“ஆழமாய் வேர் விட்டு, அகலமாய் கிளை பரப்பி, ஆயிரம், ஆயிரம் ஆண்டுகள் தமிழ் மண்ணில் நிலைத்து நின்று நிழல் தரும் ஆல விருட்சமாக ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் இயக்கத்தை மக்கள் சக்தி கொண்டு தொடங்கினார் நம் புரட்சித் தலைவர்.
‘ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண்போம்’ என்னும் காஞ்சித் தலைவனின் சங்க நாதத்தை தம் அரசியல் வாழ்வின் ஆதார நோக்கமாகக் கொண்டு அதனையே இந்த இயக்கத்தின் வேதமாக, கொள்கையாக மாற்றி, இம்மண்ணில் தன் இறுதி மூச்சு வரை ஏழைப் பங்காளனாகவே வாழ்ந்து மறைந்தவர் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நம் உள்ளங்களிலும், உலகத் தமிழர்களின் இல்லங்களிலும் ‘அம்மா’ என்கிற அடையாளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் புரட்சித்தலைவி தனது மகத்தான ஆளுமைத் திறனால், அளப்பரிய மக்கள் செல்வாக்கால், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையோடும், அடுத்தடுத்து ஆளுங்கட்சி என்கிற மகோன்னதப் பெருமையை 2016 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் படைத்து, அதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் வெற்றிகளின் மூலம் வாகைக்கே இலக்கணம் வகுத்துவிட்டு, கம்பீரமாய் நம்மையும், கழகத்தையும் விண் முட்டும் உயரத்தில் நிறுத்திவிட்டு, திராவிட அரசியலின் தேவதையாம் நம் அம்மா தெய்வத்திருவடிகளை அடைந்து விட்டார்.
‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தின் தேவையும், சேவையும் தனக்குப் பின்னாலும் தொடர வேண்டும் என்று சட்டமன்றத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டார் அம்மா. “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது” என்று எதிரிகளைப் பார்த்து அறைகூவல் விடுத்தார் நம் அம்மா. அந்த சூளுரையை நிரூபித்துக் காட்ட வேண்டிய பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
புரட்சித் தலைவியின் நலன் ஒன்றையே எனது நலனாக, அவரின் விருப்பங்களையே எனது விருப்பமாக, அவரின் லட்சியங்களுக்கு உடன் நிற்கும் துணையாக இதுவரையிலான என் வாழ்வு அமைந்துவிட்டது. இந்த 33 ஆண்டு பயணத்தின் பொழுதுகளை நினைத்துப் பார்த்துக் கொண்டே எனது எஞ்சிய வாழ்நாளைக் கழித்து விடலாம் என்றாலும், இந்த இயக்கம் சிறிதளவும் கீழிறங்கிவிடக் கூடாது என்கிற என் உள்ளார்ந்த அக்கறையாலும், என் அன்பு உடன்பிறப்புகளாகிய உங்களின் அன்புக் கட்டளையாலுமே இந்த பொது வாழ்வு என்ற வேள்வியில் என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்ள உடன்பட்டேன்.
அ.தி.மு.க. எனும் ஒப்பற்ற இந்த இயக்கத்தின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும். வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள், எக்கு கோட்டையில் விரிசல் விடாதா? தடி ஊன்றியாவது எழுந்துவிட மாட்டோமா? என்று எண்ணிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், முன்பைவிட உறுதியாய், அன்பென்பதில் அடர்த்தியாய், கழகத்தையும், தமிழகத்தையும், கண்களெனக் காத்திட புரட்சித்தலைவரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில், புரட்சித்தலைவியின் திருநாமத்தின் பேரால் சூளுரை ஏற்போம்.
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை நாடு போற்றும் வகையில் கொண்டாட வேண்டும் என்பது, புரட்சித் தலைவியின் கனவாக இருந்தது.
அம்மாவின் அந்தக் கனவை நிறைவேற்றும் வண்ணம், புரட்சித் தலைவரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை கழகத்தின் சார்பில் ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு தனது கடிதத்தில் சசிகலா தெரிவித்துள்ளார்.