நாக் அவுட் நாயகன் என்று போற்றப்பட்ட முகமது அலியும், புரட்சித்தலைவர் என்று தமிழக மக்களால் நினைவுகூரப்படும் எம்.ஜி.ஆரும் ஒரே தினத்தில் பிறந்தவர்கள். ஆம்.. இருவருக்கும் ஜனவரி 17ம் தேதிதான் பிறந்தநாள்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது 1980ம் ஆண்டு தமிழ்நாடுக்கு வந்தார் முகமது அலி. அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான பயணம் அது.
அவருடன் போட்டியில் சண்டையிட முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியனான ஜிம்மி எல்லிஸ் என்பவரும் உடன் வந்திருந்தார்.
முதல்வர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், ரசிகர்களும் முகமது அலிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தன்னை வரவேற்க கூடியிருந்த மக்கள் திரளைக் கண்டு வியந்த முகமது அலி, “என்னை வரவேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதை பார்த்து நெகிழ்ச்சி அடைகிறேன். என்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை எனது வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாப்பேன்” என்று தழுதழுத்த குரலில் கூறினார்.
சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் குத்துசண்டை போட்டி நடந்தது. சுமார் இருபதாயிரம் சென்னைவாசிகள் திரண்டிருந்தனர். முகமது அலி அரங்கினுள் நுழைந்த போது அரங்கமே கரகோஷங்களால் அதிர்ந்தது.
ஜிம்மி எல்லிஸ் உடன் மோதிய முகமது அலி சென்னையில் பயிற்சிமுறை பாக்சர்களாக இருந்த சிலருடனும் முகமது அலி விளையாட்டாக மோதினார். தமிழ்நாட்டின் அப்போதைய மாநில குத்து சண்டை சாம்பியனான திருவள்ளூரை சேர்ந்த ராக்கி பிராஸ் என்பவருடனும் முகமது அலி மோதினார்.
முகமது அலியுடன் மோதினார் என்கிற ஒரே காரணத்திற்காகவே எட்டாம் வகுப்பு கூட தேறாத ராக்கி பிராஸ்க்கு தெற்கு ரயில்வேயில் கலாசி வேலை கிடைத்தது. எக்மோர் ரயில்வே நிலையத்தில் கலாசியாக வேலை பார்த்து பின் பயணிகளுக்கு வழிகாட்டுபவராக உயர்ந்தார் ராக்கி பிராஸ்.
முகமது அலியுடன் போட்டி போட, கடைசியாக பத்துவயது சிறுவன் மேடை ஏறினான். அவனுக்கு போக்குகாட்டும் விதமாக துள்ளிக்குதித்தபடி மேடையை சுற்றிச்சுற்றிவந்த பின்னர், அவனை தனது முகத்தில் குத்துமாறு கூறிய முகமது அலி, அவனது உயரத்துக்கு தக்கவாறு முழங்காலிட்டு அமர்ந்தார் ஜாலியாக போட்டியிட்டார்.
அந்த சிறுவன் விட்ட குத்துகளில் இருந்து தனது முகத்தை லாவகமாக காப்பாற்றிக் கொண்ட முகமது அலி, பின்னர், மூலையில் இருந்த கயிற்றின்மீது சரிந்தவாறு நின்று, தனது வயிற்றில் குத்தும்படி கூறினார்.
இப்படியாக அந்த குத்துசண்டை போட்டி நிறைவடைந்தது. சென்னைக்கு வந்த முகமது அலிக்கு மக்கள் கொடுத்த வரவேற்பும், அவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து கொடுத்த போஸ்களும், மறுநாள் நாளிதழ்களில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தன.