சென்னை: அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ரஜினி, அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் சென்னை மாநகர மேயருமான சைதை துரைசாமி முதன்ஆளாக தனது ஆதரவை தெரிவித்து உள்ளார். மேலும், ரஜினிக்கு எம்ம்ஜிஆருக்கு துணை நின்றவர்கள், ஆதரவு தருவார்கள் என தெரிவித்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிட்டதை வரவேற்றுள்ள சைதை துரைசாமி, “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் தொடரட்டும் ரஜினியின் பணி” என்று கூறி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக கூறி வந்த ரஜினி, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கட்சி தொடங்குவது குறித்து டிசம்பர் 31ல் தேதி அறிவிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து உள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், அதிமுக மூத்த தலைவருமான சைதை துரைசாமி, “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் தொடரட்டும் ரஜினியின் பணி” என்று கூறி தனது ஆதரவை நல்கியுள்ளார்.
இதுதொடர்பாக சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி துவக்கம், வருகின்ற டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு என்று சொல்லி இருக்கிறார். இது சாதாரண அறிவிப்பு அல்ல. தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திருப்பம் இது. 1972ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் கொண்டுவந்த மாற்றத்தை போல அமையக்கூடிய திருப்பத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவித்துள்ளார்.
கடந்த 2018ம் வருடம் மார்ச் 5ம் தேதி வேலப்பன் சாவடியில் எம்.ஜி.ஆர் திருவுருவச்சிலை திறப்பு விழாவிலே அவர், “என்னால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல் நல்லாட்சியை, ஏழைகளுக்கான ஆட்சியை, சாமானியருக்கான ஆட்சியை, நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கான ஆட்சியை தர முடியும்” என்பதை ஆழ்ந்த நம்பிக்கையுடன் உறுதிபடச் சொல்லி இருந்தார்.
நல்ல திறமையான ஆசோகர்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அத்தகைய ஒரு ஆட்சியைக் கொடுப்பேன் என்பதையும் சொல்லியிருந்தார். ஏழைகளுக்கான சாமானிய மக்களுக்கான புரட்சித் தலைவரின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்ய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்வந்திருப்பதை வரவேற்கிறேன்.
அவருக்கு எம்.ஜி.ஆருக்கு துனை நின்று ஆதரவளித்து திமுகவை வீழ்த்திய அனைவரும் ஆதரவு தருவார்கள் என்பது திண்ணம்.
கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களின் நலனை மட்டுமே மனதில் கொண்டு அவர் முழுநேர அரசியலில் ஈடுபடுவது என்று முடிவு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.
“தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. நிச்சயம் அது நடக்கும்” என்ற ரஜினியின் நம்பிக்கையான வார்த்தையை வரவேற்று அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்”
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் பொன்னையன் உள்பட பலர், அதிமுக பாஜக கூட்டணிக்கு இன்றுவரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சைதை துரைசாமி கடந்த சில ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியுள்ளார். அதுபோல மேலும் பல தலைவர்களும் தற்போதைய தலைமைமீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக ஒதுங்கி உள்ளனர். அவர்களை தனது கட்சிக்கு இழுக்க ரஜினி முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியே சைதை துரைச்சாமியின் அறிக்கை என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ரஜினி அதிகாரப்பூர்வமாக கட்சியை அறிவித்ததும், பல முன்னணி முன்னாள் அதிமுக தலைவர்கள், ரஜினி கட்சியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.