சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதுபோல முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.சும் மரியாதை செலுத்தினார்.
அதிமுக நிறுவனமும், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் இன்று கொண்டாடங்பபட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜிஆர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில், அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதுபோல சென்னையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “பொதுமக்களின் மகத்தான ஆதரவோடும், தொண்டர்களின் எழுச்சியோடும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் கட்சியை நிறுவி, பத்தாண்டு கால பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டிற்கு வழங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மகத்தான மாபெரும் மக்கள் இயக்கத்தை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்கும் வகையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் களப் பணியாற்ற நாம் அனைவரும் உறுதி ஏற்போம். துரோகக் கூட்டத்தை ஜனநாயக ரீதியில் வென்றெடுத்து, இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.