டில்லி
கடந்த ஏப்ரல் மாதம் தரவேண்டிய 100 நாள் வேலைத்திட்டத்துக்கான ஊதியத்தில் 99% மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு 100 நாட்கள் கட்டாய வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு அளித்து வருகிறது. கடந்த 2016ஆம் வருடம் முதல் மின்னணு முறையில் நிதி உதவியை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அதனால் விரைவாக நிதி உதவி கிடைக்கும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்துக்கு நிதி உதவியை சரிவர வழங்கவில்லை. இது வரை ஏப்ரல் மாதத்துக்கான 99% நிதியை இன்னும் அளிக்காமல் உள்ளதால் மாநில அரசுகள் இந்த திட்டத்தின் கீழ் பணி புரிவோருக்கு ஊதியம் அளிக்க முடியாமல் உள்ளது. அத்துடன் மார்ச் மாதத்துக்கான நிதியில் 86% மும், பிப்ரவரி மாதத்துக்கான நிதியில் 64% மும் பாக்கி உள்ளன.
மாநில அரசுகள் வழக்கமாக தங்களிடம் உள்ள நிதியைக் கொண்டு இந்த ஊதியங்களை வழங்கி விட்டு மத்திய அரசு அளிக்கும் போது அதை திரும்ப எடுத்துக் கொள்வது வழக்கம் ஆகும். தற்போதுள்ள நிலையில் மத்திய அரசு இந்த நிதி உதவியை எப்போது வழங்கும் என தெரியாததால் மாநில அரசுகளும் தங்களிடம் உள்ள நிதியில் இருந்து இந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க தயக்கம் காட்டி வருகின்றன.