மேட்டூர்: மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியில் நீடித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் 60,000 கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்க உள்ளது. இதனால், காவிரி கரையோரத்தைச் சேர்ந்த 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணைக்கு கீழ்ப் பகுதியில் உள்ள ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 60,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 37,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீர்தான் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 43.47 டிஎம்சியாகவும் உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.