சேலம்: டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியான மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகளை கடந்த நிலையில், அணையில் தூர் வாரப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகளை கடந்து 91வது ஆண்டில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், அணையில் தூர் வார அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேட்டூர் அணை கட்டும் பணி 1925 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 9 ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர், 1934 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி மேட்டூர் அணை கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. மேட்டூர் அணை கட்டுவதற்கான செலவு தொகை ரூ. 4.80 கோடி என தெரிவிக்கப்பட்ட உள்ளது. . தொடர்ந்து 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி அப்போதைய ஆங்கில ஆட்சியில் சென்னை கவர்னராக இருந்த ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி அணையைத் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்பட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பயன்படுத்தப்படுகிறது. மேட்டூர் அணை நீளம் 5,300 அடி, அணையின் நீர்த்தேக்க பகுதி 59.25 சதுர மைல்கள் கொண்டது. அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் உச்சபட்சமாக 120 அடி வரை நீர் சேமித்து வைக்கலாம்.
பாசனத்துக்குத் தண்ணீரை திறந்து விடுவதற்கு அணையின் நீர்மட்ட அளவை பொறுத்து மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு மற்றும் மின் நிலையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்றுவதற்கு, 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதகுகள் 20 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்டுள்ளன. உபரி நீர் திறக்கும் 16 கண் மதகிற்கு மேட்டூர் அணை கட்டுவதற்கு கண்காணிப்பு இன்ஜினியராக கர்னல் எல்லீஸ் கால்வாய் என பெயரிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு ஆகஸ்ட் 21-ம் தேதியன்று, பாசனத்திற்காக முதன்முதலாக நீர் திறந்து விடப்பட்டதன், 90 ஆண்டுகள் நிறைவு பெற்று 91வது ஆண்டில் வெற்றிநடை போட்டு வருகிறது.
கடுமையான வெள்ளத்தை தாங்கியும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்கும் மேட்டூர் அணையில் தூர் வார தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக பெரும் அணைகளில் தூர் வாரப்படுவது சாத்தியமற்றது என்ற நிலையில், மேட்டூர் அணையில் முதன்முறையாக தூர் வார தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சோதனை அடிப்படையில் மேட்டூர் அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூர்வார முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் நீர்வளத்துறையினர் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அரசின் அனுமதியை பெற்று தூர் வாரும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக, சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதியை பெற ஆலோசர்களை நியமனம் செய்ய நீர்வளத்துறை டெண்டர் கோரியுள்ளது. மத்திய அரசின் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை மையம், தமிழக நீர்வளத்துறை இணைந்து சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்துள்ளது. சாத்தியக்கூறு அறிக்கையின்படி, மேட்டூர் அணையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.