சேலம்: மேட்டூர் அணையின்  நீர்மட்டம் இன்று 115 அடியை கடந்த நிலையில், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

காவிரில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 7வது நாளாக குளிக்கவும், படக்கு சவாரிக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.  தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு  வெள்ளம்போல் காவிரி நீர் வருகிறது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 13 ஆயிரத்து 513 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 115.730 அடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி என்ற நிலையில் நீர்மட்டம் 115 அடியை கடந்துள்ளது. இதனால் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால்  மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து,  மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என்பதால் உபரி நீர் எந்த நேரத்திலும் முழுமையாக வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மேட்டூர் அணை நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் கண்காணிப்பு பணியை துவங்கி உள்ளனர்.