சேலம்; கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீர் வரத்து அதிகமுள்ளதால், நடப்பாண்டில்,  மேட்டூர் அணை   5-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தற்போது ஓய்ந்துவிட்டது. இது பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும். இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட சற்று முன்னதாகவே முடிவடைந்தது. இதனால், தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.  ஆனாலும், கேரளா, கர்நாடக மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

காவிரி நீர்பிடிப்புகளில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனால், அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளதால், உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், இரண்டு  2 அணைகளின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1 லட்சத்து 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியானது. இதனால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிட்டது. காலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.09 அடியை எட்டியது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,08,529 கன அடியில் இருந்து 1,16,683 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து மொத்தமாக 90,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதன்படி, டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 21,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

16 கண் மதகு வழியாக 68,700 கன அடி நீர் மற்றும் கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணையில் நீர் இருப்பு 93.614 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை ! முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133 அடியாக உயர்வு