சென்னை:
மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ சென்னை திருமங்கலம்நே-ரு பூங்கா இடையிலான சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை தொடங்குகிறது. இந்தச் சேவை 2 ஆண்டுகள் தாமதமாகத் தொடங்கப்படுகிறது.
ஸ்மார்ட் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் தான் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் அட்டையின் குறைந்தபட்ச விலை ரூ.100 ஆகும். தேவைக்கேற்ப ஸ்மார்ட் அட்டையில் பணத்தை நிரப்பி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரூ.10 கட்டணத்தில் பயணிக்க வேண்டிய தொலைவுக்கு ரூ.100 செலுத்த கட்டாயப்படுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில், ‘‘கோயம்பேடு-விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் தொடங்கப்பட்ட போதே அதற்கான கட்டணம் மிக அதிகம் என்று கூறப்பட்டது. மெட்ரோ ரெயில்சேவை விரிவாக்கம் செய்யப்படும் போது கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதற்கு மாறான செயல்களில் மெட்ரோ நிறுவனம் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. எனவே, ஸ்மார்ட் அட்டைக்கான கட்டணத்தையும், பயணிகள் கட்டணத்தையும் அடித்தட்டு மக்களுக்கும் கட்டுபடியாகும் வகையில் குறைக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முன்வர வேண்டும்’’ என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.