சென்னை: கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில், வரும் 2028-ம் ஆண்​டு​முதல் மெட்ரோ ரயில்​களை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தெற்கு ரயில்​வே​யிடம் இருக்​கும் சென்னை கடற்​கரை – வேளச்​சேரி வழித்​தடத்தை மெட்ரோ ரயில் நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்​கும் திட்​டத்​துக்கு ரயில்வே வாரி​யம் கொள்கை ரீதி​யான ஒப்​புதலை ஜூலை 31-ம் தேதி வழங்​கியது. இதையடுத்து, அந்த வழித்தடத்தில் உள்ள நடைமேடைகள் மற்றும் ஸ்டேஷன்களை தரம் உயர்த்த முடிவு செய்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 2028 முதல் அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக சிஎம்ஆர்எஸ், எம்ஆர்டிஎஸ் இடையே  புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாக உள்​ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள்,  இதன் மூல​மாக பறக்​கும் ரயில் சேவை​யின் சொத்​து, ரயில் இயக்​கம் மற்​றும் பராமரிப்பு ஆகியவை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்திடம் ஒப்​படைக்​கப்படும். இதன் பிறகு இந்த வழித்​தடம் முழு​மை​யாக மெட்ரோ ரயில் கட்​டமைப்​புக்கு மாற்​றப்​பட​வுள்​ளது. குறிப்​பாக ஒவ்​வொரு ரயில் நிலை​யத்​தி​லும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் உள்ள வசதி​கள் போன்று ஏற்​படுத்​தப்பட உள்​ளது.

இதுகுறித்​து,  செய்தியாளர்களிடம் கூறிய மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் , கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​திடம் ஒப்​படைக்​கும் பணி 2 மாதங்​களுக்​குள் முடிவடை​யும் என எதிர்​பார்க்​கிறோம். மெட்ரோ ரயில் நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்ட பிறகு, இந்த வழித்​தடம் அடியோடு மாற்​றப்பட உள்​ளது. அதன்படி பறக்கும் ரயில் ஸ்டேஷன்கள், மெட்ரோ ரயில் என்ன கட்​டமைப்​பில் இயங்கி வரு​கிறதோ அதே​போல ரயில் நிலை​யங்​கள், ரயில் இயக்​கம், சிக்​னல், தண்​ட​வாளம், தொழில்​நுட்​பம், பாது​காவலர் என அனைத்​தும் அமை​யும். இதற்​கான ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றுள்​ளது. வழித்​தடம் ஒப்​படைக்​கப்​பட்ட முதல் 2 ஆண்​டு​களுக்கு இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த  கட்​டமைப்​பு​கள் முழு​மை​யாக மாற்​றப்​பட்ட பின்பு அதாவது 2028-ம் ஆண்​டு​முதல் இந்த வழித்​தடத்​தில் மெட்ரோ ரயில்​களை இயக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மேலும், வேளச்​சேரி​யில் உள்ள புறநகர் ரயில் பணிமனைக்​கான இடம் மெட்ரோ ரயில்​களை பராமரிப்​ப​தற்கு ஏற்ப மாற்​றப்​பட உள்​ளது.

இவ்​வாறு தெரிவித்துள்ளனர்.