சென்னை: தி.நகர் பனகல்பூங்கா – கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடமும் ஒன்று. இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம் பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது.  இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன.

தற்போது, போரூர் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட பால பணிகள் முடிவடைந்து, தண்டவாளங்கள் அமைக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வழித்தடத்தில் ரயிலை இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதற்கிடையில், இந்த வழிடத்தில் அமைக்கப்பட்டு வரும் , சுரங்கப்பாதை பணிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதே வழித்தடத்தில், தியாகராய நகர் பனகல் பூங்கா – கோடம்பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பூமியில் இருந்து 18 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜன.31-ம் தேதி தொடங்கியது. முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘பெலிகன்’, பூமியில் இருந்து 18 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்ற நலையில்,  அடுத்த சில மாதங்களில் ‘பிகாக்’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியைத் தொடங்கியது.

இரண்டு இயந்திரங்களும் உஸ்மான் சாலை மேம்பாலத்தின் அடியில் சுரங்கப்பாதை அமைத்து, கோடம்பாக்கம் புறநகர் ரயில் பாதை மற்றும் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் கீழ் வந்து, விரைவில் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் நிலையத்தை அடையும். இந்த சுரங்க பாதையில் களிமண்ணை வெளியேற்றுவது, அடுக்குமாடி குடியிருப்புகள் அருகே சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை இயக்குவது உள்பட பல்வேறு சவால்கள் காரணமாக, சுரங்கப்பாதை பணி மெதுவாக நகர்ந்தது.

கடந்த மாதம் “பெலிகன்” சுரங்கம் தோண்டும் இயந்திரம் 1.3 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்தது. அதாவது, இந்த இயந்திரம் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைந்தது. மற்றொரு சுரங்கம் தோண்டும் இயந்திரமான “பிகாக்” விரைவில் இலக்கை அடையவுள்ளது.

இதுகுறித்து,  செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் , பனகல்பூங்கா – கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வரை 2.063 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை பணி மேற்கொள்ள வேண்டும். இதில், பனகல்பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நிலையம் வரை சுரங்கப்பாதை நீளம் 1.155 கி.மீ. ஆகும்.

ஒரு ஆண்டுக்கு பிறகு, பனகல் பூங்காவிலிருந்து சுரங்கம் தோண்டும் (பெலிகன்) இயந்திரம் கோடம்பாக்கம் நிலையத்தை கடந்த மாதம் வந்தடைந்தது. அதாவது 1.3 கி.மீ. சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்தது. இதற்கு பின்னால், பிகாக் சுரங்கம் தோண்டும் இயந்திரம் விரைவில் பணியை நிறைவு செய்ய உள்ளது. மொத்தம் 2.5 கி.மீ. இருமார்க்கமாக நிறைவடைந்துள்ளது. அனைத்து பணிகளும் செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளர்.