பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழிதடத்துக்கான விரிவான திட்ட அறிக்கை வரும் நவம்பர் மாதம் தயாராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை, ஸ்ரீபெரும்பதூர் வழியாக பரந்தூரில் உள்ள கிரீன்ஃபீல்டு விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் பாதை நவம்பர் மாதத்திற்குள் உறுதிப்படுத்தப்படும்.
ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் அண்ட் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் இந்த பாதைக்கான விரிவான திட்ட அறிக்கையை ரூ.1.74 கோடி மதிப்பில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
லைட்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 2 ஆம் கட்டத்தின் 4-வது வழித்தடத்தின் விரிவாக்கமாக இருக்கும் இந்த பரந்தூர் மெட்ரோ வழித்தடம் 43.63 கிமீ நீளம் கொண்டது மற்றும் 19 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்களை கொண்டதாக இருக்கும்.
நவம்பர் மாதம் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மண் ஆய்வுக்காக 100 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுதல் மற்றும் முழு நீளத்திற்கு ட்ரோன்களைப் பயன்படுத்தி நிலப்பரப்பு ஆய்வு செய்வது ஆகியவை இந்த திட்ட அறிக்கையில் இடம்பெறும்.
தவிர, பரந்தூரில் அமையவிருக்கும் விமான நிலையம், திருமழிசை பேருந்து முனையம் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.