சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45 கி.மீ. தூரத்திற்கான மூன்றாவது வழித்தடத்தில் 28 சுரங்கம் மெட்ரோ ரயில் நிலையங்களும் 19 உயர் மட்ட ரயில் நிலையங்களும் இடம்பெறுகின்றது.
அயனாவரம், ராயப்பேட்டை, அடையாறு, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.
அயனாவரம் – பெரம்பூர் இடையே கல்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் 866 மீட்டர் நீளத்திற்கான சுரங்கம் தோண்டப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரம்பூர் ரயில் நிலையம் கட்டுமானத்தின் ஒரு பகுதி அமைக்கும் பணி நடைபெற்றுவருவதாகக் கூறிய அதிகாரிகள் ஜனவரி மாத இறுதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
முதல் சுரங்கம் தோண்டும் கல்வராயன் இயந்திரம் பெரம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்த பிறகு இரண்டாவது சுரங்கம் தோண்டும் மேலகிரி இயந்திரம் வேகம் எடுக்கும் எனவும், இதன் அடுத்தகட்டமாக பெரம்பூர் புறநகர் ரயில் பாதையின் கீழ் சுரங்கம் தோண்டும் பணியில் கல்வராயன் இயந்திரம் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.