சென்னை விமான நிலையம் முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவை அடுத்த கிளம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

12 ரயில் நிலையங்களுடன் 15.3 கி.மீ. தூரம் கொண்ட இந்த உயர்மட்ட ரயில் பாதை முழுவதும் ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.

திட்ட வரைவு ஒப்புதல் கிடைத்ததும் இதற்கான பணிகளை துவக்க தயாராகி வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டத்திற்கு தேவையான முதலீட்டு நிறுவனங்களை ஆய்வுசெய்து வருகிறது.

பல்லாவரம், கோதண்டம் நகர் (ரேடியல் ரோடு சந்திப்பு), கிரோம்பேட், மகாலட்சுமி காலனி (கிரோம்பேட் அரசு மருத்துவமனை), திரு.வி.க. நகர் (மெப்ஸ்), தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளம்பாக்கம் உள்ளிட்ட 12 ரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமையவுள்ளது தேவைப்பட்டால் இதற்கான திட்ட வரைவில் சிறு மாறுதல்களை செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் தயாராக உள்ளதாக தெரிகிறது.

இது தவிர, டைடல் பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு 6 நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளி கோரியிருப்பதாக தெரிவித்துள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.

10 கி.மீ. தூரம் உள்ள இந்த உயர்மட்ட பாதையில் நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுகுக்குப்பம், பி.டி.சி. காலனி, ஒக்கியம்பேட், காரம்பக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.