சென்னை

சென்னை மெட்ரோ ரெயிலுக்கு மக்கள் ஆதரவு உள்ளதால் கட்டணத்தை குறைக்க ஆலோசிக்கப்பட உள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதல் முதலாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.    அதன் பிறகு சின்னமலை – விமான நிலையம்,  ஆலந்தூர் – பரங்கிமலை, திருமங்கலம் – நேரு பூங்கா என இந்த சேவை விரிவாக்கம் அடைந்தது.

இந்த மாதம் 25ஆம் தேதி நேரு பூங்கா – செண்டிரல் மற்றும் சின்னமலை – தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது.   இதை ஒட்டி கடந்த 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.    இந்த நாட்களில் சுமார் 6,11,000 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

மெட்ரோ ரெயில் இயக்குனர் நரசிம்ம பிரசாத், “இந்த இலவச சேவை மூலம் மக்கள் மெட்ரோ ரெயிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.   ஆகவே மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க உரிய அதிகாரம் கொண்ட அமைப்புடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.   அதன் பிறகு இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.