திருவனந்தபுரம்

ந்திய மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் மெட்ரோ ரயில் அமைப்பதில் பெரும் பங்கு வகித்தவர் ஸ்ரீதரன்.  இவரை மக்கள் மெட்ரோ மேன் என அழைத்து வந்தனர்.   இவர் பாஜகவில் இணைந்தார்.  இவர் பாஜகவில் இணைந்த நிகழ்வு திருவனந்தபுரத்தில் அமித்ஷா தலைமையில் பிரம்மாண்டமாக நடந்தது பலராலும் பேசப்பட்டது.  இவர் கேரள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

தற்போது அவர் அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். மெட்ரோ மேன் ஸ்ரீதரன் செய்தியாளர்களிடம், “இனி  நான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை. அதற்கு காலம் கடந்துவிட்டது. எனக்கு விருப்பமில்லை என்பது மட்டுமே நான் அரசியலைக் கைவிடக் காரணம் ஆகும்.  தற்போது எனக்கு 90 வயதாகிவிட்டது.

எப்போதுமே நான் ஒரு அரசியல்வாதியாக இருந்ததில்லை. அரசியலில் ஒரு ஆட்சிப் பணியாளராகவே  இணைந்தேன்.   நான் மக்கள் சேவைக்காக அரசியலைக் கடந்து மூன்று தொண்டு நிறுவனங்களை நான் நடத்துகிறேன். நான் தேர்தலில் முதன்முறையாகத் தோற்றபோது வருத்தமாக இருந்தது.  அதே வேளையில், வெற்றி பெற்றிருந்தாலும் எந்த  பயனும் இருந்திருக்கப் போவதில்லை. ஒரு  மாநிலத்தில் ஆட்சியில் இல்லாமல், ஒரு கட்சியின் ஒற்றை எம்.எல்.ஏ.வாக இருந்து என்ன செய்துவிட முடியும்?” எனத் தெரிவித்துள்ளார்.