சென்னை:
தமிழகத்தில் மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக ஓஎன்ஜிசி அறிவித்து உள்ளது. இதை காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக விவசாயிகள், விவசாய அமைப்புகள், அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் 100 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்தனர்.
அதுபோல, தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு இத்திட்டத்தை உடனே கைவிடக்கோரியும் டெல்லி சென்றும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது, தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை கைவிடுவதாக ஓஎன்ஜிசி அறிவித்து உள்ளது.
மத்தியஅரசின் இந்த அறிவிப்புக்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.