டெல்லி: ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளங்களை நிர்வகிக்கம் மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கொரோனாவுக்கு பிறகு, மீண்டும் பொருளாதார வளர்ச்சி ஏற்றம் கண்டு வரும் நிலையில், பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிநீக்கம் செய்து வருகின்றது. ஏற்கனவே ஸ்நான்சாட் (`Snapchat) நிறுவனம் 20 சதவிகிதம் வரை ஆட்குறைப்பு செய்தது. இதைத்தொடர்ந்து, டிவிட்டரை கைப்பற்றிய எலன்மஸ்க் 75 சதவிகிதம் பேரை பணி நீக்கம் செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஃபேஸ்புக், அமேஷான் போன்ற பெரு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் மெட்டாவின் அதிரடி ஆட்குறைப்புக்கு நடவடிக்கை தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, ‘மெட்டா’வும் 11 ஆயிரத்துக்கும் (13 சதவிகிதத்துக்கும்) மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்வதாக பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, வாட்ஸ் அப் மற்றும் மெட்டா நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட இந்திய அதிகாரிகள் ராஜினாமா செய்தனர்.
மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான தலைவரான அஜித் மோகன், வேறு ஒரு நிறுவனத்தில் மற்றொரு வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். அதைதொடர்ந்து, வாட்ஸ்-அப்பின் இந்தியத் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் இந்திய பிரிவின் மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கை இயக்குநராக இருந்த ராஜீவ் அகர்வால் ஆகியோரும் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்
இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கான புதிய தலைவராக, சந்தியா தேவநாதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மெட்டா நிறுவனம் வெளியிடுடள்ள அறிக்கையில், மெட்டா வணிகத்தின் நீண்டகால வளர்ச்சிக்கும், இந்தியாவிற்கான அர்ப்பணிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதோடு, மெட்டாவின் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க, நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாய் முன்னுரிமைகளை ஒன்றிணைப்பதில் சந்தியா தேவநாதன் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தியா தேவநாதன் 2023 ஜனவரி 1ந்தேதி புதிய பொறுப்பை ஏற்பார் எனவும், மெட்டாவின் ஆசிய பசிபிக் சந்தையின் துணைத்தலைவரான டான் நியரிக்கு கீழ் அவர் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஆசிய பசிபிக் சந்தைக்கான பேஸ்புக்கின் கேமிங் தலைவராக சந்தியா பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது ஆசிய பசிபிக் சந்தையின் தலைவர்களில் ஒருவராகவும் தொடர உள்ள சந்தியா தேவநாதன், மெட்டாவின் நிர்வாகப் பணிகளுக்காக விரைவில் இந்தியா திரும்ப உள்ளார். அவர் பொறுப்பேற்கும் வரையில், பேஸ்புக்கின் இந்திய பிரிவுக்கான இயக்குனரான, மணீஷ் சோப்ரா மெட்டா நிறுவனத்தை வழி நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவியான சந்தியா தேவநாதன், ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் பி.டெக் முடித்ததோடு, டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ-படிப்பை பூர்த்தி செய்தார். சிட்டி வங்கியில் 9 ஆண்டுகள் பணிபுரிந்ததை தொடர்ந்து, ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியில் 6 ஆண்டுகள் முதன்மை அதிகாரிகள் ஒருவராக பணியாற்றினார். பின்னர், 2016ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தில் இணைந்த சந்தியா, வியாட்நாம், சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஆன்லைன் வணிகத்தில் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
வங்கி, பணப்பரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்ப துறையில் 22 ஆண்டுகள் அனுபவமுள்ள சந்தியா தேவநாதனின் தலைமையில், மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவில் பல்வேறு புதிய மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கபப்டுகிறது.