தமிழகத்தில் ஆண்களின் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025-ல் தமிழகத்தில் 4,01,860 ஆண்களும், 2,91,347 பெண்களும் உயிரிழந்துள்ளனர். அதாவது, பெண்களைவிட 1,10,513 ஆண்கள் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த வித்தியாசம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள இந்த செய்தியில் மற்றொரு அதிர்ச்சியளிக்கும் தகவல், இந்த இறப்பு வித்தியாசத்தில் சுமார் 86% பேர் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள்.

அதாவது, வேலை செய்யும், குடும்பத்தைப் பராமரிக்கும் மற்றும் குழந்தைகள், வயதான பெற்றோருக்குப் பொறுப்பாக இருக்கும் வயதிலேயே அதிகமான ஆண்கள் உயிரிழக்கின்றனர்.

இதனால் பல குடும்பங்களில் கணவனை இழந்த பெண்களும், தந்தையை இழந்த குழந்தைகளும் உருவாகின்றனர்.

பொது சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, இளம் ஆண்களிடம் சாலை விபத்துகள் மற்றும் தற்கொலைகளும், நடுத்தர வயதில் மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் நோய்கள் மற்றும் புகையிலை, மதுப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளும் முக்கிய காரணங்களாக உள்ளன.

தமிழகத்தில் தினமும் குறைந்தது 50 பேர், பெரும்பாலும் ஆண்கள், சாலை விபத்துகளில் உயிரிழப்பதாகவும், இதே அளவுக்கு தற்கொலைகளும் நடைபெறுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பல பெண்களுக்கு கர்ப்ப காலம் உள்ளிட்ட சமயங்களில் உடல்நலப் பரிசோதனைகள் கிடைக்கும் நிலையில், பல ஆண்கள் 40 வயது வரை முறையான பரிசோதனைக்கு செல்வதில்லை.

இதனால் நோய்கள் தாமதமாக கண்டறியப்படுகின்றன.

2025-ல் தமிழகத்தில் பதிவான 6,93,207 இறப்புகளில் 2,80,856 மட்டுமே மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டவை.

மேலும், 10-ல் 6 இறப்புகள் மருத்துவமனைக்கு வெளியே நிகழ்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இறப்புக்கான துல்லியமான காரணங்களை கண்டறிவதில் சிக்கல் உள்ளது.

மாலை நேர கிளினிக்குகள் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பணிபுரியும் ஆண்களுக்கு சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், சாலை பாதுகாப்பு, பணியிடங்கள் மற்றும் சமூக அளவில் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆண்களின் அகால மரணங்களைத் தடுப்பது, ஆண்களின் நலனை மட்டுமன்றி பெண்களின் பொருளாதார பாதுகாப்பையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.