லக்னோ,

உத்தரபிரதேசம், பீஹார், மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் அரசுத் தேர்வுகளில் காப்பி அடிக்கும் ட முறைகேடுகள் இந்தாண்டும் நடைபெற்று வருகின்றன. பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் மாணவர்கள் கும்பலாக அமர்ந்து எழுதுவதும், வெளியிலிருந்து மாணவர்களின் உறவினர்கள் விடைத்தாள்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதும் போன்ற சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக வடமாநிலங்களில் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.

இந்த முறைகேடான செயல்கள் குறித்து சிலமாநிலங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதிருக்க தேர்வுகளில் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டன. தற்போது 10 ம் வகுப்புத் தேர்வு நடந்து வருகிறது. உத்தரபிரதேசம் மதுராவிலிருக்கும் ஒரு பள்ளியில் மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் தங்கள் கையில்  வினாத்தாளை வைத்துக்கொண்டு தேர்வு நடைபெறும் வகுப்புக்கு அருகில் இருந்தபடி ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை சத்தமாக சொன்னார்கள். இதேபோன்ற செயல் மதுராவின் பல்வேறு பள்ளிகளில்  நடந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் மதுரா மாவட்டத்திலிருக்கும் ராயா நகரிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கேள்விக்கான பதிலை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

தேர்வு நடைபெறும் இடத்தில் மாணவர்கள் விடைகளை சத்தமாக சொல்லிக் கொள்கின்றனர். இச்சம்பவங்கள் அனைத்தும் பள்ளி நிர்வாகிகளுக்குத் தெரிந்துதான் நடந்துகொண்டிருந்தது என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று. இதுமட்டுமல்ல மாணவர் பெயரில் தேர்வு எழுத ரூ 5000 லிருந்து 15 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள் சிலர். இவர்களை நகல் மாபியா என்று அழைக்கிறார்கள்.

அதேநேரம் இதுபோன்ற செயலில் ஈடுபட்ட 55 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர் என்றும் மாவட்ட கல்வி மையம்தான்  இவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றும் சில பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் மதுரா மாவட்ட கல்வி அதிகாரி இந்திர பிரகாஷ் சிங் இதுகுறித்து கூறும்போது, 35 பள்ளிகளுக்கு நோட்டீஷ் அனுப்பப் பட்டிருப்பதாகவும், தங்களது பள்ளிகளில் முறைகேடாக மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என பள்ளிநிர்வாகிகள் கைப்பட எழுதிதர கேட்டுக்கொண்டாத தெரிவித்தார். அதேநேரம் தவறு நடந்தது தெரியவந்தால் அந்தப்பள்ளிகள் 5 ஆண்டுகள் பிளாக் லிஸ்டில் கொண்டுவரப்படும் என்று எச்சரித்துள்ளார்.