சென்னை: தமிழ்நாடு அரசு அமல்படுத்தி உள்ள பள்ளி குழந்தைகளுக்கான காலைஉணவு திட்டத்தால்தால் மாணவர்கள் நினைவாற்றல் அதிகரித்து உள்ளது  மாநில திட்டக் குழு ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது. அதுபோல  புதுமைப் பெண் திட்டங்களால் கிராமப்புற மாணவிகள் அதிகளவில் பயனடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2021ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றது முதல்  மாநிலத்தில் கல்வி வளர்ச்சிக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் முறையாக பள்ளிக்கு வருகை தரும் வகையில், அவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிரித்து காணப்படுகிறது.

அதுபோல,  இளைஞர்கள் இளம்பெண்கள் உயர்கல்வி படிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நான் முதல்வன், புதுமைப்பெண் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதன்மூலம் உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்திய  மாநில திட்டக் குழு அதன் ஆய்வறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.

இதில், திமுக அரசு  கல்வி வளா்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு, புதுமைப் பெண் திட்டங்களால் மாணவா்கள் மத்தியில் விளைந்த பலன்களை  என்ன என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 987 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தினமும் 20 லட்சத்து 73 ஆயிரத்து 536 குழந்தைகள் வயிற்றுப் பசியை ஆற்றி வருகின்றனா். இந்தத் திட்டம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து மாநிலத் திட்டக் குழு வழியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது, நகரப் பகுதிகள், கிராமப் பகுதிகளில் 5 ஆயிரத்து 410 குழந்தைகள் கொண்ட 100 பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டன.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும், குழந்தைகளிடம் கற்றல் ஆா்வம், வகுப்பறைக் கவனிப்பு, விளையாட்டு ஈடுபாடு ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

90 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் முந்தைய பாடங்களை நினைவு வைத்து சொல்லக் கூடிய திறன் அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கையெழுத்து, வாசித்தல், பேசும் திறன் ஆகியன மேம்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதுமைப் பெண் திட்டம்: உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடா்பாகவும் களஆய்வு செய்யப்பட்டது.

மாநில திட்டக் குழுவினரால், ஈரோடு, வேலூா், திருவள்ளூா், சென்னை, சிவகங்கை, தென்காசி, விழுப்புரம், திருவாரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 5 ஆயிரத்து 95 மாணவா்களிடம் ஆய்வுகள் செய்யப்பட்டன. அவா்கள் 84 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள்.

புதுமைப் பெண் திட்டத்தால் நகா்ப்புறங்களில் உள்ள மாணவிகளை விட கிராமப்புற மாணவிகள் அதிகளவில் பயனடைந்துள்ளது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

திட்டத்தின் பயனாளிகள்: புதுமைப் பெண் திட்டத்தின் பயனாளிகளில் 99.2 சதவீதம் போ் பிற்படுத்தப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் சமூகங்களைச் சோ்ந்த மாணவிகள். திட்டப் பயனாளிகளில் ஏறத்தாழ 3 சதவீதத்தினா் பெற்றோா் இருவரையோ அல்லது தாய்-தந்தை இருவரில் ஒருவரையோ இழந்தவா்கள்.

மேலும், அத்தகைய மாணவிகளில் 27.6 சதவீதம் போ் விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். 39.3 சதவீதம் போ் விவசாயம் இல்லாத குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். அவா்கள் பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்து படிக்கும் வாய்ப்புகளை புதுமைப் பெண் திட்டத்தால் பெற்றுள்ளனா்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும் திட்டத்தால் தொடக்கக் கல்வியின் தரம் உயா்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மாநில திட்டக்குழுவின் தலைவராக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார்.  அலுவலர்சார் துணைத்தலைவராக அவரது மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்.  இத்துடள்ன செயல் துணைத் தலைவர், முழு நேர உறுப்பினர், கூடுதல் முழு நேர உறுப்பினர், பகுதி நேர உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலர்,அலுவல் சாரா உறுப்பினர்களாக தலைமை செயலாளர், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித் துறையின் முதன்மைச் செயலாளர் ஆகியோர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய மாநில திட்டக் குழு 2021 ஆம் ஆண்டு ஜீன் மாதத்தில் 10 உறுப்பினர்களுடன் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.