டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் லக்‍கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள்  குடியரசுத் தலைவரை சந்தித்து 3பக்க மனு கொடுத்தனர்.

லக்‍கிம்பூர் கேரியில் கடந்த வாரம் போராட்டம் நடத்திய விவசாயிகள்​மீது மத்தியஅமைச்சரின் மகன் காரை ஏற்றியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 9 பேர்  உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்‍கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, லக்‍கிம்பூர் கேரி வன்முறை  விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தி நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி தலைமையில், ராஜ்யசபா காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் சந்தித்து பேசினார்.

அப்போது அவர்கள் லக்‍கிம்பூர் கேரி வன்முறை குறிதத சுயாதீன நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை  உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன் கார்கே,  லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக நாங்கள் ஜனாதிபதியிடம் அனைத்து விவரங்களையும் கொடுத்தோம். நாங்கள் 2 கோரிக்கைகளைக் கொண்டுள்ளோம்-சிட்டிங் நீதிபதிகளால் சுயாதீன விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும், மத்திய அமைச்சர்  அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் நீதி கிடைக்கும் என்று வலியுறுத்தி உள்ளதாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,  பிரியங்கா வத்ரா, லக்கிம்பூ ர் கேரி விவகாரம் குறித்து று அரசாங்கத்துடன் இன்று விவாதிப்பதாக ஜனாதிபதி எங்களுக்கு உறுதியளித்தார். குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை மத்திய அமைச்சராக இருப்பதால்,  நியாயமான விசாரணை சாத்தியமில்லை என்பதால் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஜனாதிபதியிடம் கூறினோம். அதேபோல், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு சிட்டிங் நீதிபதிகளால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோரினோம் என்று கூறினார்.