சேன்னை: மேகதாது அணை திட்டம் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.

மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை எவ்வாறு தமிழகத்திற்கு பாதகமாக இருக்கும் என்பதை விளக்கி மத்திய நீர்வளக் குழுமத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழக அரசு காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக 30 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை கர்நாடக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இதனை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை தமிழகத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு வாதிட்டதாக கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பாக வாதாடும் மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படியும் முதலமைச்சரின் உத்தரவுப்படியும் வெள்ளிக்கிழமை மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை தமிழகத்துக்கு பாதகமாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இருக்கும் என்பதை குறிப்பிட்டு மத்திய நீர்வளக்குழுமத்திடமும் விரிவான மனு அளித்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]