ஆண்டிகுவா
வங்கி மோசடி செய்து தப்பி ஓடிய மெகுல் சோக்சிக்கு இந்திய அரசு அதிகாரி அளித்த நன்னடத்தை சான்றிதழ் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டதாக ஆண்டிகுவா பிரதமர் தெரிவித்துள்ளார்.
வங்கியில் மோசடி செய்து இந்தியாவை விட்டுத் தப்பி ஓடிய நிரவ் மோடியுடன் அவரது கூட்டாளியான மெகுல் சோக்சி மற்றும் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். லண்டனில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிரவ் மோடியின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து லண்டன் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
அவரது கூட்டாளி மெகுல் சோக்சி ஆண்டிகுவா நாட்டுக் குடியுரிமை பெற்றுள்ளார். அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த இந்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆண்டிகுவா நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரவுனி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மெகுல் சோக்சியை விசாரணை செய்ய இந்திய அதிகாரிகள் எங்கள் நாட்டுக்கு வரலாம்.
மெகுல் சோக்சி விரும்பினால் அவரை இங்கேயே விசாரணை செய்யலாம்.
மெகுல் சோக்சிக்கு இந்திய அரசு அதிகாரி அளித்த நன்னடத்தை சான்றிதழின் அடிப்படையில் அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. அது தவறான சான்றிதழ் என இப்போது தெரிய வந்துள்ளது இதற்கு இந்திய அரசு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.
மெகுல் சோக்சி ஒரு மோசடிக்காரர். அவர் எங்கள் நாட்டுக்கு எந்த பெருமையும் தேடித் தரவில்லை. அவர் அளித்துள்ள மேல் முறையீட்டு மனு விசாரணை முடிந்த பிறகு அவரை நாங்கள் நாட்டை விட்டு வெளியேற்றி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கத் தயாராக உள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.