ஸ்ரீநகர்

விதி எண் 370 மற்றும் 35 ஏ விலக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி கண்டம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க அரசியலமைப்பு சட்டத்தில் விதி எண் 370 மற்றும் 35ஏ அமைக்கப்பட்டது.   இந்த விதிகளுக்கு பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.    கடந்த வாரம் காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வந்த அம்ர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டு  யாத்திரிகர்கள் திரும்ப அனுப்பப்பட்டனர்.

மாநிலத்தில் இருந்த சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வெளி மாநிலத்தவரும் உடனடியாக வெளியேற வலியுறுத்தப்பட்டது.  அத்துடன் பல தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.  இவை அனைத்தும் காஷ்மீர் மாநிலத்தில் கடும் பதட்டத்தை உண்டாக்கியது.

இன்று மக்களவையில் அமித்ஷா காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த விதி எண் 370 மற்றும் 35 ஏ விலக்கிக் கொள்ளப்பட உள்ளதாக அறிவித்தார்.  அது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   இது குறித்து மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலர் வைகோ அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய தினம் இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு கருப்பு தினமாகும்.  கடந்த 1947 ஆம் வருடம் எடுக்கப்பட்ட இரு நாட்டு முடிவை இந்திய அரசு மறுத்து காஷ்மீரிகள் முதுகில் குத்தி உள்ளது.   விதி எண் 370 ஐ விலக்கிக் கொள்வது சட்ட விரோதமானதாகும்.

இது இந்திய துணைக்கண்டத்தில் பல பின்விளைவுகளை அளிக்கும்.  இந்திய அரசின் எண்ணம் தெளிவாக தெரிகிறது.   இந்திய அரசு காஷ்மீரி மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க முயல்கிறது.   இதன் மூலம் இந்தியா தனது வாக்குறுதியை மீறி உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.