சில்லோங்:
மேகாலயாவில் தேடப்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் சோஹான் டி. ஷிரா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காரோ தேசிய விடுதலைப் படை (ஜிஎன்எல்ஏ) தலைவராக சோஹான் டி.ஷீரா செயல்பட்டு வந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி வேப்டாளர் ஜோனத்தோன் என்.சங்மா கொல்லப்பட்ட பின்னர் ஷீராவின் தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேர்தல் நடக்கும் தெற்கு மற்றும் கிழக்கு காரோ மலைப் பிரதேச மாவட்டங்களில் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்து.
இந்நிலையில் டோபு பகுதி அருகே அச்சாக்பேக் கிராமத்தில் ஷீரா பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை துப்பாக்கி ஏந்திய போலீசார் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இன்று காலை 11 மணியளவில் ஷீரா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கிழக்கு காரோ மலைகள் துணை கமிஷனர் ராம்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.
முன்னதாக சங்மா கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து மேகாலயா டிஜிபி எஸ்.பி.சிங் கூறுகையில், ‘‘சங்மா கொலை சம்பவத்தில் ஜிஎன்எல்ஏ அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது’’ என்றார். கடந்த 18ம் தேதி இரவு 8 மணிக்கு சங்மா மற்றும் 3 பேர் கிழக்கு காரோ மலை மாவட்டம் சமந்தா பகுதியில் கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.