ஷில்லாங்
விவசாயிகள் கோரிக்கையை ஒடுக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் இந்த சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 2 மாத காலமாக போராட்டம் நடைபெற்று வருகின்ற போதும் இதுவரை மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
இந்த போராட்டம் குறித்து நேற்று மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், “மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஒடுக்கக்கூடாது. மாறாக கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை அவர்களுக்குப் புரிய வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு கோரிக்கையையும் ஒடுக்குவது என்பது சரியான தீர்வு ஆகாது. இதன் மூலம் போராட்டம் மேலும் அதிகரிக்கும்.
நாட்டின் நலனுக்காக இந்த போராட்டத்தை முடித்து வைக்க வேண்டியது அரசின் முக்கிய பணியாகும். இரு பக்கமும் பேச்சு வார்த்தைகள் நடத்தி ஒரு இணக்கமான முடிவை அடைய வேண்டிய நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். அரசு இந்த நடவடிக்கைகளின் போது இரு மாதங்களுக்கும் மேலாகப் போராடும் விவசாயிகளின் கோரிக்கையிலும் அக்கறை காட்ட வேண்டும்.
விவசாயிகள் டில்லியில் வந்து போராடுவதால் அவர்களின் குடும்ப பணிகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டிருக்கும். விவசாயிகளுக்கு இதற்கான பாதுகாப்பு ஏதும் கிடையாது. எனவே அரசு முன்வந்து இந்த போராட்டத்தை உடனடியாக நிறுத்த சமாதான பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டும். அனைத்து பொறுப்பும் அரசின் கைகளில் உள்ளதால் அரசு தனது பெருந்தன்மையைக் காட்டி விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
கடந்த ஜனவரி 26 அன்று போராட்டத்துக்குள் விஷமிகள் புகுந்து கலவரம் செய்துள்ளனர். அதுவரை அமைதியாகப் போராட்டம் நடந்து வந்தது. விவசாயிகள் பொறுப்புடன் எவ்வித ஆத்திரமும் இன்றி போராடி வந்தனர். எனவே அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது. மாறாக விவசாயிகளுடன் உள்ளக் கருத்து வேற்றுமையை நீக்க தேவையான நல்ல மற்றும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.