சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், வருகிற 12ம் தேதி மாநிலம் முழுவதும்  1லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் தமிழ்நாடு  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து  உள்ளார்.

சென்னையில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று மாநலி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மகாராஷ்டிரா, கேரளா போல் தமிழகத்திலும் கொரோனா எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்றவர்,  சென்னையில் 22 இடங்களில் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவல் உள்ளதாகவும் கூறினார்.

தொற்று பரவலின் வேகம் கூடுதலாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தவர், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் இன்னும்,   42 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 1 கோடியே 22 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டியதுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன்,  அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வகையில், தமிழ்நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் கூறினார்.

மேலும், 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட மறுநாள் முதல்  12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தனியார் மருத்துவமனைகள் 388 ரூபாய்தான் வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.