உறவுகள்கவிதை பகுதி 12

மேகக் காதலன்

பா. தேவிமயில் குமார்

 

வீடு கொடுத்த எனக்கு உன்

வீட்டில் இடம் கொடுக்காதது ஏன் ?

 

படிக்க ஏடு கொடுத்தேன், என்னை

ஏட்டுச் சுரைக்காய் ஆக்கியதேன் ?

 

இசைக்கருவிகளை கொடுத்த எனக்கு

இரங்கற்பா பாடியதேன் ?

 

உங்களுக்காகவே வாழும் எனை

ஓங்கி வெட்டியது ஏன் ?

 

காயும் கனியும் கொடுத்த என்னை

கரிக்கட்டையாய் ஆக்கியதேன் ?

 

நிழல்தானே கொடுத்தேன், பின் ஏன்

நெடுஞ்சாலைகளில் வீழ்த்தினீர்கள் ?

 

எழுது பொருட்கள் கொடுத்த என்னை

எழுதுவதோடு நிறுத்தியதேன் ?

 

மருந்துப் பொருட்கள் கொடுத்த எனக்கு

மரணத்தைக் கொடுப்பதேன் ?

 

தென்றலைக் கொடுத்த எனக்கு

திதி கொடுப்பதேன் ?

 

விலங்குகளே என் வாழ்வின் அடையாளம்

விளங்கியது இப்போது,

யார் உண்மையான விலங்கென்று !

 

என்னில் பாட்டிசைத்த பறவைகள்

என்னைக் காணாமல் தவிக்கிறது !

 

பிராண வாயுவை தந்த என்

பிராணத்தை எடுப்பதேன் ?

நன்றி கெட்ட மனிதர்கள் !

 

என்னைத் தேடி என் மேகக் காதலன்

அலைகிறான் !

நான் இல்லாத இடத்தில் ஒரு

நாளும் அவன் இருப்பதில்லையே !

 

எங்களை வெட்டிசாய்த்து விட்டு

எதைத் தேடி செல்கிறீர்கள் ?

இளைப்பாறவா ?

இயற்கையை பார்க்கவா ?

தேனெடுக்கவா ?

தென்றல் காற்றை ரசிக்கவா ?

மழை மேகத்தையா ?

மலை அருவியையா ?

 

இப்படியேப் போனால்,

இனி நி(நீ)லப்பந்து

கரும்பந்தாகட்டும் !

இந்த யுகம் முடிந்து

இன்னொரு யுகம் ஆரம்பிக்கட்டும் !

 

கண்ணீருடன்

மரங்கள்