லக்னோ:

.பி. மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் உள்ள மீரட் மாவட்டத்தின் பெயரை பண்டிட் நாதுராம் கோட்சே நகர் என மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி. மாநிலத்தில் பாஜக ஆட்சி பதவி ஏற்றது முதல் பல ஊர்களின் பெயர்களை மாற்றி வருகிறது. ஏற்கனவே கங்கை நதி இணையும் இடடமான, அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல வருடமாக அலகாபாத் என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த நகரத்தை பிரயாக்ராஜ் என்று மாற்றியது. அதுபோல, உத்தரபிரதேசத்தின் ஃபைஜாபாத் மாவட்டம் பெயர், அயோத்தியா என்றும் மாற்றப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மீரட் மாவட்டத்தின் பெயரை மாற்ற யோகி தலைமையிலான மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில அரசின் வருவாய் துறை மூன்று மாவட்டங்களின் பெயரை மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களின்  மாஜிஸ்திரேட்டு களிடம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி,  ஹபூர் மாவட்டத்தை மஹந்த் அவைத்யநாத் நகர் என்றும் காசியாபாத் மாவட்டத்தை மஹந்த் திக்விஜய் நகர் என்றும் மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், ஹபூர் மாவட்ட நிர்வாகம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் குருவான அவைத்யநாத் பெயரைச் சூட்ட மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.  ஆனால்,  முசாபர் நகருக்கு மாற்றுப் பெயர் என்ன என்பது தெரியவில்லை.

முன்னதாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி மீரட் மாவட்டத்தில் நடைபெற்ற அகில பாரத இந்து மகா சபை கூட்டத்தில்,  மீரட்  மாவட்டத்துக்கு கோட்சே பெயரைச் சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தது.

இதையடுத்து, மீரட் மாவட்டத்துக்கு ‘பண்டிட் நாதுராம் கோட்சே’ என்று பெயர் சூட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.