மதுரை,

லக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ பிடித்தது. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக கோவிலின் உள்பகுதி மற்றும் ஆயிரங்கால் மண்டபம் சேதமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து,   தீ பிடித்து எரிந்த பகுதியில் தடய அறிவியல் நிபுணர்கள், ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் உள்ள சாலையோர கடைகளில் தீ பிடித்துள்ளது. இந்த தீயை தீயணைப்பு வீரர்கள்  கடுமையாக போரிட்டு கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்து மதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் இருந்த 35 கடைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாயின.

அதேவேளையில, கோவிலின்  மேற்கூரையிலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சில தூண்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கோவிலின்  மேற்கூரை பூச்சுகள் சேதமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழியாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவிலின் மேற்கூரை மற்றும் அந்த பகுதியில் தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட கோவிலின் தூண்கள் போன்றவற்றின் உறுதி தன்மையை குறித்து, , தடய அறிவியல் துறை  நிபுணர்கள் மற்றும்   வருவாய், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தீ விபத்து நடந்த பகுதியை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்  ஆய்வு செய்தார்.