பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தவறான தகவல்களை கூறி வருவதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீனாட்சி சுந்தரம், “தமிழக பள்ளிகளில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடும் கோடை வெயில் காரணமாக, ஒருவாரம் தாமதமாகவே பள்ளிகளை திறக்க கேட்டுக்கொண்டோம். ஆனால் ஆசிரியர்களை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு, உடனடியாக பள்ளிகளை திறந்தார்கள். இதனால் ஆசிரியர்களை விட, மாணவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையிலும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் ஏதும் வழங்கப்படவில்லை. ஓய்வு பெறும் நாளன்று, அரசு ஊழியர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கையாக தான் இதை பார்க்க முடிகிறது. போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம், ஊதிய உயர்வு ரத்து போன்ற உத்தரவுகள் எல்லாம் பழிவாங்கும் நடவடிக்கைகள் தான். இந்த போக்குகள் காரணமாக தான் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக, அரசு ஊழியர்களின் 20 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. இதே நிலை நீடித்தால், அரசு ஊழியர்களின் வாக்குகளை முழுமையாக அக்கட்சி இழக்க நேரிடும்.
தமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் நடத்தப்படும். மும்மொழிக் கொள்கை என்பது மறைமுகமாக இந்தியை திணிக்கும் நடவடிக்கையே. அதனை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்தார்.