சென்னை: தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாயுவு நடைபெற்று வரும் நிலையில்,  இன்று சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது.

நடப்பாண்டு மருத்துவ படிப்பு கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடுமையான கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளுடன்  நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 18 ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.  முதல் 3 நாட்கள் நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவ இடக்ளை பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு அதற்கான ஆணைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில்  தொடங்கியது.  இதில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என சிறப்பு பிரிவின் கீழ் வருபவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்றைய கலந்தாய்வில் 44 மாற்றுத்திறனாளிகள், 15 விளையாட்டு பிரிவு மாணவர்கள் உள்பட 70 பேர் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். பொது பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 23-ம்தேதி தொடங்க இருக்கிறது.