சென்னை: சென்னையில் நாளை மருந்து கடைகள், மருத்துவமனைகள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்கக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆகையால் அதை கட்டுப்படுத்த, நேற்று முதல் ஜூன் 30-ம் தேதிவரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களிலும் அத்தியாவசிய பொருள்களுக்கான மளிகைக் கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந் நிலையில் நாளைய முழு ஊரடங்கு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் இன்று ஒரே நாளில் 4,424 வாகனங்கள் விதிகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்தது தொடர்பாக 1,133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 144 தடை மீறல் தொடர்பாக 2,791 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை ஜிப்மர் தேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட் காண்பித்தால் போதும், வேறு ஏதேனும் நுழைவு தேர்வு இருந்தாலும் ஹால் டிக்கெட் காண்பித்தால் அனுமதி உண்டு. நாளை மருந்து கடைகள் மருத்துவமனைகள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்கக்கூடாது. காலையில் மட்டும் பால் கடைகளைத் திறக்கலாம் என்று தெரிவித்தார்.