கண் பாதிப்பு என்பது யாரோ ஒருவருக்கு இருந்த காலம் மாறி ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது இரண்டு நபருக்காவது இந்த பாதிப்பை பார்க்க முடியும். இதில் பிரச்னை என்னவென்றால் கண் நீர் அழுத்த நோய் பலபேருக்கு இருந்தும் தனக்கு அந்த பிரச்னையிருக்கிறது என்று தெரியாமல் இருப்பது கொடுமையான ஒன்று.
கண்ணுக்குள் லென்ஸின் முன்புறத்தில், கருவிழியும் கார்னியாவும் இணைகிற பகுதியில் சிலியரி இழைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு திரவம் சுரக்கிறது. இதற்கு ‘முன்கண் திரவம் ‘[Aqueous Humor] என்று பெயர். கண்ணின் வெளிப்பக்கத்தில் வட்ட வடிவில் இருக்கிற கார்னியா மற்றும் லென்ஸ் போன்ற கண்ணின் பல்வேறு பகுதிகளுக்குத் தேவையான உணவுச் சத்துகளை கொண்டுசெல்லவும். கண்ணுக்குள் உண்டாகின்ற கழிவுகளை அகற்றுவதற்கு உதவியாக இருக்கிறது.
கண்ணீருக்கும் இந்த திரவம் சுரப்பதற்கும் எந்த சம்பந்தம் இல்லை. இரண்டும் ஒன்று கிடையாது. கண்ணின் வெளிப்பக்கமாகக் கண்ணீர் சுரக்கிறது என்றால், இது கண்ணின் உட்பக்கமாகச் சுரக்கும். இது விழிவெண்படலமும் (Conjunctiva) கார்னியாவும் இணையும் இடத்தில் உள்ள சல்லடை போன்ற வடிகால்களின் மூலம் வெளியேற்றப்படுகிறது.
இந்தப் பாதையில் ஏதேனும் அடைப்பு, இதன் வடிதலில் பிரச்னை ஏற்பட்டாலே, அல்லது அதிகத் திரவம் சுரந்தாலோ, திரவத்தின் அளவு அதிகமாகி, கண் நீர் அழுத்த நோயை உண்டாகிறது.
ரத்தக் குழாய்களில் செல்லும் ரத்தத்துக்கு ஒருவித அழுத்தம் இருப்பதைப் போல, கண்ணில் செல்லும் இந்தத் திரவத்துக்கும் அழுத்தம் இருக்கிறது. அதுதான் கண்ணின் அழுத்தத்தை நிர்ணயிக்கிறது. இந்தத் திரவம் சுரக்கிற அளவும் வெளியேறுகிற அளவும் சமமாக இருந்தால், கண் நீர் அழுத்தம் சரியான அளவில் இருக்கும். நமக்குச் சரியான கண் நீர்அழுத்தம் பத்து முதல் இருபது மி.மீ. பாதரச அளவாகும். விழிக்கோளத்தின் கனஅளவுகள் மாறாமல் இருப்பதற்கு, இந்த அழுத்தம் அவசியமாகிறது.
ஒருவேலை இந்த அழுத்தம் அதிகமானால், அது கண் முழுவதும் பரவும். குறிப்பாக, விழித்திரைக்குப் பின்புறம் இருக்கிற பார்வை நரம்பைப் பாதிப்படையச் செய்யும். பார்வை பற்றிய தகவல் மூளைக்குச் செல்லாது. அதனால் பார்வை பறிபோகும். இதுதான் இந்த நோயின் அபாயகரமான பாதிப்பாகும்.
அறிகுறிகள் என்ன?
இந்த நோயின் ஆரம்பத்தில் எந்தவொரு அறிகுறியும் வெளியில் தெரியாது. திடீரெனக் கண்பார்வை குறைவது, இதன் முதல் அறிகுறியாகும். இந்த நிலைமையில் மருத்துவரிடம் வரும்போது, நோயாளிக்குப் பார்வை நரம்பில் முப்பது முதல் ஐம்பது சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட்டுவிடும். இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய முடியாது.
முதல் வகை அறிகுறிகள்;
இன்னும் சில அறிகுறிகள் உண்டாகும். எரியும் மின்விளக்கைப் பார்க்கும்போது, அதைச் சுற்றி வட்டமாக வண்ண வளையங்கள் அல்லது புள்ளிகள் தெரியத் தொடங்கும். இவர்கள் அடிக்கடிக் கண்ணாடியின் ‘பவரை’ மாற்றுவார்கள். இருட்டிலிருந்து வெளியே வரும்போது கண்களைச் சுற்றிக் கனமாக உணர்வார்கள்.
இவர்களுக்கு இரவு நேரங்களில் பார்வை மங்கலாக இருக்கும். இருட்டுக்குக் கண்கள் பழகத் தாமதம் ஆகும். பகலில் ஒரு பொருளைப் பார்த்தால், அந்தப் பொருளின் நடுப்பகுதி நன்றாகத் தெரியும். ஆனால், பக்கப்பார்வை இல்லாமல் இருக்கும்.
நடுப்பார்வை கூர்மையாக தெரிவதால், தங்களுக்கு இருக்கும் நோயை ஆரம்பநிலை தெரியாது. ஆனால், நாளாக ஆக நடுப்பகுதிப் பார்வையும் குறைந்துவிடும். கண்ணைச் சுற்றி ஒரு மந்தமான வலி, எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கும்.
இரண்டாம் வகை;
ஒரு சிலருக்கு திடீரென்று கடுமையான கண்வலியும் தலைவலியும் ஒரே நேரத்தில் ஏற்படும். வாந்தி வரும். கண்கள் சிவந்துபோகும். கண்களில் நீர் வழியும். பார்வை மங்குதல், கண்கள் கூசத்தொஇடங்கும்.
மூன்றாவது வகை;
பிறவியிலேயே குழந்தைகளுக்கு உண்டாகக்கூடியது. இது மிகவும் மோசனாது ஆகும். இந்த வகை குழந்தையின் கண் பார்ப்பதற்கு பெரிதாக இருக்கும். கண்களில் நீர் வடிந்துகொண்டே இருக்கும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவுக்குக் கண்கள் கூசும். பார்வை குறைந்து கானப்படும்.
இந்த நோய் யாரை அதிகம் பாதிக்கிறது?
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோயின் பாதிப்புகள் அதிகம். மற்றும் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பர்களுக்கும், அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளுவதால் இது சீக்கிரத்திலேயே வந்துவிடுகிறது. இது பரம்பரை நோய் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அது அவர்களது குழந்தைகளுக்கு ஏற்படும்.
அதிக மைனஸ் பவர் கண்ணாடி போட்டுக்கொள்கிறவர்களுக்கு, இது வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கண்ணில் அடிபட்டு, முன் கண் திரவம் போகும் பாதையில் அடைப்பு உண்டானாலும் இது ஏற்படலாம்.
பரிசோதனை முறைகள்?
‘விழி அழுத்தமானி’ [Tonometer] எனும் கருவி மூலம் கண்ணின் அழுத்தத்தைத் அரிந்துகொள்ளலாம். ‘விழி அகநோக்கி’ [Ophthalmoscope] பயன்படுத்திப் பார்வை நரம்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் பார்த்து விடலாம். ‘விழிக்கோணமானி’ [Gonioscope] உதவியுடன் முன்கண் திரவம் வெளியேறுவதில் எங்குத் தடை ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். பார்வை பரப்பளவை அளக்க உதவும் கணினி இணைக்கப்பட்ட ‘பெரிமீட்டர்’ [Perimeter]கருவிப் பரிசோதனையால் பக்கப் பார்வை எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அளந்துகொள்ள உதவும்.
சிகிச்சை முறைகள்?
இந்த நோய்க்கு மருந்து சிகிச்சை, லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சை என மூன்றுவித சிகிச்சைகள் உள்ளன. நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் மருந்து மூலம் குணப்படுத்தலாம். ஆனால், இவர்கள் வாழ்நாள் முழுவதும் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி தொடர்ந்து முறையான கால இடைவெளிகளில் கண் பரிசோதனைகளை எடுத்துக் கொள்ளுவது அவசியமாகும்.
சிலருக்கு மருந்து சிகிச்சையோடு நவீன சிகிச்சையான லேசர் சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும். கருவிழியில் மிகச் சிறிய துளை போட்டு முன்கண் திரவத்தை வெளியேற்றி கண்ணின் அழுத்தத்தைக் குறைப்பதே லேசர் சிகிச்சையின் [Laser iridotomy] நோக்கம்.
கண் நீர்அழுத்த நோயை இந்த இரண்டு சிகிச்சைகளாலும் குணப்படுத்த முடியவில்லை என்றால், கண்ணில் திரவ அடைப்பைத் திறக்க ‘டிரபிகுலெக்டமி’ [Trabeculectomy] எனும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். இந்தச் சிகிச்சையின்போது முன்கண் திரவம் வெளியேறும் பாதை மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் காரணமாக கண் நீர்அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவில் நிலை நிறுத்தப்படும்.
இந்த அறுவை சிகிச்சையால் மேற்கொண்டு ஏற்படக்கூடிய பார்வை இழப்பை மட்டுமே தடுக்க முடியுமே தவிர அறுவை சிகிச்சைக்கு முன்பு ஏற்கெனவே இழந்துவிட்ட பார்வைக்குறைபாடை சரிசெய்ய இயலாது.!
அந்தப் பார்வை இழப்பு என்பது நிலையானது ஆகும். ஆகையால், இந்த நோயைப் பொறுத்தவரை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆரம்பநிலையில் சிகிச்சை எடுப்பது மட்டுமே தீர்வாக அமையும்.