சென்னை: மருத்துவ மேற்படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்- மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் தங்கள் விண்ணப்பம் நிராகரித்ததை எதிர்த்து கிரீஷ்மா கோபால், ரோஹன் மகேஷ்  ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்களது மனுவில், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது சரியல்ல என்று குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  இந்திய தூதரகம் அளித்த வெளிநாடு வாழ் இந்தியர் எனும் சான்றிதழ்கள் போலி, குறிப்பிட்ட மதிப்பெண்களை பெறவில்லை என்பதால் நிராகரிப்பு செய்யப்பட்டதாக  தேர்வுக்குழு விளக்கம் அளித்துள்ளதாக கூறினார்.

இதை கேட்ட நீதிபதிகள், தேர்வுக்குழு மீது அதிருப்தி தெரிவித்ததுடன்,  மனுதாரர்களின் சான்றுகள் மட்டும் சரிபார்க்கப்பட்டதாக தேர்வுக் குழு அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று கூறியதுடன்,  அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும்  அனைவரின் சான்றுகளையும் சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.