சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இதுமுவரை 62,627 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பதாக,.அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மேலும், திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.
சென்னையில் அப்போலோ மருத்துவமனை, ஸ்ரீராமச்சந்திரா, சிம்ஸ், எம்ஜிஎம், காவேரி மருத்துவமனை, கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, தாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மருத்துவமனை சார்பில், இணைந்து சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் 7 இடங்களில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்கள் டிசம்பர் 8ந்தேதி (ஞாயிறு) அன்று நடத்தப்பட்டது.
இந்த மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மேற்கொள்ளக்கூடிய பரிசோதனைகள் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டார். ஆய்வினைத் தொடர்ந்து பொதுமக்களுக்காக இலவச மருத்துவ முகாமில் பணியாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரையும் சால்வை அணித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கௌரவித்தார்.
இந்த நிகழ்வின்போது சைதை பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துரைராஜ் உட்பட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,
சென்னையில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனைகள் இணைந்து இன்று சென்னை முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தினர். சைதாப்பேட்டையில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் டிசம்பர் இறுதி மட்டுமல்லாமல் தேவைக்கு ஏற்ப வகையில் ஜனவரி மாதம் கூட நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலம் தீபத்திற்கு எவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என்று அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு மருத்துவ சிறப்பு முகாம்கள் அமைக்க உள்ளோம். கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு மருத்துவ சிறப்பு முகாம் கூடுதலாக செய்ய உள்ளோம்.”
“வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் தற்போது வரை 62,627 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழையில் துவங்கப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் மட்டும் 34 லட்சம் மக்கள் பயன் பெற்றுள்ளனர் .
மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளான திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் பகுதிகளில் மட்டும் 5,556 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. துணை முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு கூறினார்.