திருப்பாவை – பாடல் 26  விளக்கம்

மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும்.

அந்தவகையில், மார்கழி மாதத்தின் 26 ஆம் நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல் 26

திருப்பாவை பாடல் 26

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பொருள்:

இது நோன்பிற்குத் தேவையானவைகளை எல்லாம் கண்ணனிடம் வேண்டிக் கொள்ளும் பாடல். அடியவர்களிடம் மிகுந்த ஆர்வம் உள்ளவனே! நீல மணி போல நீல நிற மேனியனே! ஆலிலை மேல் பள்ளி கொண்டிருப்பவனே! மார்கழி நோன்பைப் பெரியவர்கள் கொண்டாடினார்கள். அதை அனுசரித்து, இப்போது நாங்களும் மார்கழி நோன்பைச் செய்து கொண்டிருக்கிறோம்.

அந்த நோன்பிற்காக உலகத்தில் உள்ள தீயவர்கள் எல்லாம் நடுங்கும்படியாக ஒலிக்கின்ற, பால் போன்ற நிறங்கொண்ட, உன்னுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் சங்கைப் போன்ற சங்குகள் வேண்டும். அகன்று, மிகவும் பெரிதாக இருக்கும் பறைகள் வேண்டும். உன் புகழ் பாடும் பாடகர்கள் வேண்டும். அழகிய மங்கல தீபங்கள் வேண்டும். (நாங்கள் எல்லாம் உன் அடியார்கள் என்பதை விளக்கும்) கொடிகள் வேண்டும். மேலும், இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.