டில்லி
மத்திய அரசு மோடியுடன் கனடா அதிபர் ஜஸ்டின் டுரூடோ பேசியதில் சாதகமானவற்றை மட்டும் வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன .

இந்தியப் பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் டூரூடோ தொலைபேசி மூலம் கொரோனா தடுப்பூசி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த செய்தியில் டுரூடோ கொரோனா தடுப்பூசி தேவை குறித்து விரிவான உரையாடல் நிகழ்த்தியதாகவும் அதை ஒட்டி பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியைக் கனடாவுக்கு அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது கனடா அரசு இந்த உரையாடல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் டுரூடோ தனது உரையில் இந்தியாவில் நிகழும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பலவற்றையும் பேசி உள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அவற்றைக் குறித்து எவ்வித தகவலும் அளிக்காமல் கொரோனா தடுப்பூசி வேண்டுகோள் குறித்து மட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்குக் காண்போம்.
கனடா அரசு அறிக்கையில்,
“இன்று பிரதமர் ஜஸ்டின் டுரூடொ இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.
இரு தலைவர்களும் கொரோனா பரவலைத் தடுப்பது குறித்தும், மக்களின் சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு குறித்தும் பேசி உள்ளனர். இருவரும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு மற்றும் இதற்கான உலக நாடுகளின் ஆதரவு குறித்து விவாதித்துள்ளனர். இந்த தடுப்பூசியை அளிப்பதில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளனர். கொரோனா தாக்கத்தில் இருந்து உலகைக் காக்க தங்கள் ஆதரவை அளிக்க இரு தலைவர்களும் முன் வந்துள்ளனர்.
இந்தோ பசிபிக் பகுதியில் உள்ள இரு நாடுகளுக்கும் பொதுவான பல விவகாரங்கள் குறித்தும் உலக அளவில் தாக்கத்தை உண்டாக்கும் வெப்பநிலை பாதிப்பு மற்றும் உலக வர்த்தக வலுவாக்கம், சர்வதேச விதிமுறைகள் உருவாக்குதல் குறித்தும் பேசி உள்ளனர். கனடா மற்றும் இந்தியாவில் நடைபெறும் பல ஜனநாயக மாறுதல்கள், சமீபத்தைய போராட்டங்கள், இந்த போராட்டங்களைத் தீர்க்க தேவையான வழிகள் ஆகியவை குறித்தும் விவாதித்துள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசியல் ஆர்வலர்கள், “புராண காலத்தில் அன்னப்பறவை பாலை மட்டும் குடித்து விட்டு நீரை விட்டுச் செல்லும் எனச் சொல்வார்கள். ஆனால் மத்திய மோடி அரசு இந்த விவகாரத்தில் பாதியை வெளியிட்டு மீதியை மறைத்துள்ளது” என விமர்சித்துள்ளனர்.
[youtube-feed feed=1]