மதுரை:  ஒரே மாணவன் 3 இடங்களில் நீட் தேர்வு எழுத தேசிய தேர்வு முகமை எப்படி  அனுமதித்தது என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின்போது,  ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை இதுவரை தேசிய தேர்வு முகமை வழங்காததன் மூலம், குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுவது போல தெரிகிறது என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்ததுடன்,   இந்தியாவிலேயே இல்லாத மாணவனுக்கு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத எப்படி அனுமதித்தது என  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா தேர்வுபெற்று, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தார். எனினும் உதித் சூர்யாவுக்காக வேறு ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வை எழுதியதாக புகார் எழுந்தது. தமிழ்நாடு அரசின் சிபிசிஐடி விசாரித்து வரும் இந்த வழக்கில், உதித் சூர்யா, உள்ளிட்ட 27 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

 இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி இடைதரகராக செயல்பட்ட தருண் மோகன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  அரசு வழக்கறிஞர்  ஆஜராகி, தேசிய தேர்வு முகமை இதுவரை எந்த தகவலையும் தராததால், வழக்கு விசாரணை தொய்வாகவே நடைபெறுவதாக கூறினார்.

அதேநேரத்தில், தேசிய தேர்வு முகமை தரப்பில் மத்திய அரசின் வழக்கறிஞர் ஆராஜராகி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். இதனைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி வழக்கு பதிவு செய்து ஐந்து ஆண்டு ஆவதாகவும், இந்தியாவிலேயே இல்லாத மாணவனுக்கு மூன்று மாநிலங்களில் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஆனால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகள் தாலி அணிந்து வந்தால் அதனை கூட கழட்ட சொல்லி சோதனை செய்கிறீர்கள் என்றவர்,  ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை இதுவரை தேசிய தேர்வு முகமை வழங்காததன் மூலம், குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுவது போல தெரிகிறது என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்

நீட் தேர்வு முறைகேட்டில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில்   ஏன் சோதனை செய்ய நடத்த உத்தரவு பிறப்பிக்க கூடாது? என்ற கேள்வி எழுப்பிய  நீதிபதி இதே நிலை தொடர்ந்தால் அவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.

இதையடுத்து,  மத்திய அரசு தரப்பில் இறுதியாக அறிக்கை தாக்கல் செய்வதாக கால அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணையை ஜூலை 16 ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.