சென்னை:

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  மதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளதாகவும், யாரும் அதிருப்தியில் இல்லை என்றும்  விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக மதிமுக பொதுச்செயலாளர் வை.கோவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, திமுக தலைவர் முன்னிலையில் வைகோ வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையில், தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது வேட்புமனு ஏற்கப்படுமா என்பது கேள்விக்குறியான நிலையில், திமுக தரப்பில் இருந்து மாற்று வேட்பாளராக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்தார்.

இது மதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை யின் போது வைகோவின் மனு ஏற்றுக்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  என் வேட்புமனு ஏற்றுக்கொண்ட செய்தியால் என் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் என்று கூறினார். என் வேட்புமனு ஏற்கப்படும் என்று நம்பிக்கை இருந்தது என்று கூறியவர், நான், யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை நான் போட்டியிடுவதால் மதிமுகவில் எந்த வித அதிருப்தியும் இல்லை என்று விளக்கம் அளித்தார். இன்னும் சொல்லப்போனால், பதவியிலிருந்தவர்கள் தான் மதிமுகவிலிருந்து சென்றனர் என்று கூறியவர்,  ஏற்கனவே மத்திய அமைச்சர் பதவிக்கான வாய்ப்பு எனக்கு இருமுறை கிடைத்தது. ஆனால்  அதை நான் ஏற்க  மறுத்தேன் என்று தெரிவித்தவர், என் குடும்பத்திலிருந்து யாரும் பதவிக்கு வரமாட்டார்கள். மதிமுக தொண்டர்களுக்காகவே நான் வாழ்கிறேன்’ என்றும் தெரிவித்தார்.

23 ஆண்டுகளுக்கு பிறகு எம்.பி-யாகி மீண்டும் ராஜ்யசபா செல்கிறார் வை.கோ. என்பது குறிப்பிடத்தக்கது.