சென்னை
நான்கு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகும் திமுக தொகுதிப் பங்கீட்டை முடிக்காததால் இன்று மதிமுக அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போது தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க. , விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் ம.தி.மு.க. ஏற்கனவே 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
இன்று காலை 10 மணிக்கு ம.தி.மு.க. நிர்வாகக்குழு அவசரக்கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் ம.தி.மு.க. தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.