திருச்சி: கடந்த 2018ம் ஆண்டு திருச்சியில் நாதக, மதிமுக இடையே ஏற்பட்ட விமான நிலைய மோதல் வழக்கில் இருந்து திருச்சி மாவட்ட நீதிமன்றம், நாதக தலைவர் சீமான் உள்பட அனைவரையும்  விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2018-ல் திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும் மதிமுகவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை வழக்குபதிவு செய்தது. வழக்கில்,  நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 19 பேரை சேர்த்திருந்தது. இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக  திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாதக தலைவர் சீமான் உள்பட 19 பேரை விடுவித்து உத்தரவிட்டு உள்ளார்.

முன்னதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், நாதக சீமானும் கடந்த 2018ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். இருவரையும் வரவேற்க கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வந்திருந்தனர். வைகோவின் கார் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியபோது, நாதகவினர் கூச்சல் போட்டனர். இதை மறுமலர்ச்சி திமுகவினர் தட்டிக் கேட்க முற்பட்டபோது, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனை தொடர்பாக மதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இருதரப்பினரின் மோதலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக, இரு கட்சியினர் மீதும் விமான நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு திருச்சி 2-வது கூடுதல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 6 வருடங்களாக நடந்த வழக்கு விசாரணையில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மறுமலர்ச்சி திமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பெல் இரா.ராசமாணிக்கம் மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலாளர் ப.சுப்ரமணியன், முன்னாள் பகுதிச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் வருகை தந்தனர். வழக்கில் மூத்த வழக்கறிஞர் டி.ஏ.ஓம்பிரகாஷ், வழக்கறிஞர் ஷீலா ஆகியோர் விசாரணைக்கு உதவினார்கள்.

இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில்,  இன்று  19.07.2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  மோதல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 19 பேரையும் விடுவித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.