சென்னை:
சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில், விதிமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், பதாதைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சைதாப் பேட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த மதிமுக பேனரை அகற்றும்போது தகராறில் ஈடுபட்ட மதிமுக நிர்வாகி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம்பெண் சுபஸ்ரீ அதிமுகவினரின் பேனரால் மரணத்தை தழுவிய நிலையில், பேனர்கள் தொடர்பாக உயர்நீதி மன்றம் கடும் உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து, விதிமீறல் பேனர்கள் தமிழகம் முழுவதும் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் விழா மாநாடு தொடர்பாக சைதாப்பேட்டை டாடண்டர் நகரில் மதிமுக கட்சி கொடிகம்பங்கள் மற்றும் சிறிய அளவிலான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இதை அகற்ற அந்தப்பகுதி மாநகராட்சி செயற்பொறியாளர் வரதராஜன் தலைமையில் ஊழியர்கள் அகற்றும் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த மதிமுக தொண்டர்கள் மாநகராட்சி அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்து, அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில், சைதாப்பேட்டை போலீசார், மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியை கைது செய்துள்ளனர். அவர் மீது காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக திட்டுதல், ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக கொடிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியபோது, அவர்களுக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பை மாவட்ட செயலாளர் சுப்பிரமணி விலக்கி விடச் சென்றார் என்று தெரிவித்து உள்ளார்.